புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகந்தவெவ பகுதியில், வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலுகந்தவெவ, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியேறிய இவர், வயல்வெளியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கிப் பொறியில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஆனமடுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், பலுகந்தவெவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.