பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் விழா நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) பொறுப்பதிகாரிக்கு (OIC) எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எப்.யு. வூட்லர் (ASP F.U. Wootler), நிறைவேற்று அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச ஊழியர்களாக, பொலிஸ் அதிகாரிகள் உயர்தர தொழில்முறை மற்றும் ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
“பொலிஸ் அதிகாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது. பொறுப்பதிகாரி சம்பந்தப்பட்ட இச்சம்பவம் குறித்து கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் (DIG) வழிகாட்டலின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் (SSP) விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
பொலிஸ் சேவையின் கௌரவம் மற்றும் நேர்மையைப் பாதுகாப்பதற்காக இத்தகைய கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஏ.எஸ்.பி. வூட்லர் மேலும் குறிப்பிட்டார்.