கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட செவிலியருக்கும், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்ற நபருக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்பு இருந்துள்ளது.
கடந்த முதலாம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியருக்கும், சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில், முன்னாள் மனைவி வீதியில் சென்ற வந்தபோது, அவரைத் துரத்திச் சென்ற சந்தேக நபர் கத்தியால் அவரது மார்பில் குத்தியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அரநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, சந்தேக நபர் ஏற்கனவே திருமணமாகி சட்ட ரீதியாக பிரிந்தவர் என்பதும், செவிலியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலையை செய்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை நீதவான் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.