குடிவரவு நடைமுறைகளில் தவறான விபரங்களை வழங்குவதற்குத் தூண்டியதாகக் (counselling immigration misrepresentation) குற்றம் சாட்டப்பட்டு, அதனை ஒப்புக்கொண்ட சஸ்கடூன் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நிபந்தனையுடனான சிறைத்தண்டனையும் (conditional sentence) 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பால்விர் சிங் (Balvir Singh) என்ற இந்த நபருக்கு ஜூலை 8 அன்று தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தண்டனையில் 40 மணிநேர சமூக சேவையும் (community service) உள்ளடக்கப்பட்டுள்ளது.
சஸ்கடூன் இலாப நோக்கற்ற அமைப்பொன்றுடன் தொடர்புடைய குடிவரவு விண்ணப்பங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்ததை அடுத்து, 2018 ஆம் ஆண்டில் தங்களது விசாரணை தொடங்கியதாக கனடா எல்லைச் சேவைகள் முகவாண்மை (CBSA) தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாகாண குடிவரவு விண்ணப்பங்களில் போலியான வேலைவாய்ப்பு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வெளிநாட்டுப் பிரஜைகளை சிங் தூண்டியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆவணங்களில் போலியான ஊதியச் சீட்டுகள் (pay stubs), வேலை வாய்ப்புக் கடிதங்கள் மற்றும் உண்மையில் இல்லாத வேலைகளுக்கான பதிவுகள் ஆகியவை உள்ளடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னர் சில நபர்கள் தங்களது விசா அனுமதிப் பத்திரங்களின் கீழ் அங்கீகரிக்கப்படாத விநியோகம் (delivery), கட்டுமானம் மற்றும் உணவக வேலைகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதாக CBSA தெரிவித்துள்ளது.
குடிவரவு அனுசரணைக்காக (immigration sponsorship) வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து 40,000 டாலர் வரை சிங் கட்டணம் வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் (Immigration and Refugee Protection Act) கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.