காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கலாசாரச் சொத்துக்கள் மற்றும் தொல்பொருட்களை மீண்டும் முறைப்படி தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த, சிறப்பு வழிநடத்தல் குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
‘வெளிநாட்டிலுள்ள இலங்கை கலாசார பாரம்பரியத்தை மீளப்பெறுவதற்கான குழு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இக்குழு, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் மேலதிக செயலாளரின் (கலாசார மேம்பாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள்) தலைமையில் இயங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது..
1970 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ உடன்படிக்கையின் பிரிவு 7 மற்றும் 13 ஆகியவற்றின் கீழ், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட அல்லது கொண்டு செல்லப்பட்ட கலாசார சொத்துக்களை மீண்டும் கோருவதற்கான உரிமை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ‘ரைக்ஸ்முசியம்’ (Rijksmuseum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த லேவ்கே திசாவையின் பீரங்கி (Lewke Disava’s cannon), 2 பெரிய துப்பாக்கிகள், 2 கஸ்தானே வாள்கள் மற்றும் உரையுடன் கூடிய கத்தி உட்பட 6 பெறுமதிமிக்க தொல்பொருட்கள் 2023 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக இலங்கைக்குத் திரும்பப் பெறப்பட்டன.
நெதர்லாந்து குழுவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி, காலனித்துவ காலத்தில் கொண்டு செல்லப்பட்ட எஞ்சிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்களையும் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு இக்குழு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.