மட்டக்களப்பு:
மட்டக்களப்பு – கல்குடா கடற்கரைப் பகுதியில், உரிய அனுமதியின்றி இராணுவத்தினரால் பேணப்பட்டு வரும் வணிக நிலையத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் எவ்வித அனுமதியுமின்றி, உள்ளூராட்சி மன்றத்தின் சட்டவிதிமுறைகளை மீறி குறித்த கடை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பில் சிவில் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகப் புகார்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனைத் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே, இராணுவத்தின் அத்துமீறலுக்குத் துணைபோகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. எனவே, சட்டவிரோதமாக இயங்கும் இந்தக் கடையை உடனடியாக அகற்றி, கல்குடா கடற்கரைப் பகுதியின் சுயாதிபத்தியத்தை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உரிய தரப்புகளை வலியுறுத்தியுள்ளனர்.