2026 மே 12 | இரவு 7:04 மணி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு கோட்டை நீதவான் பாசான் அமரசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகள், இந்த விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்தியதுடன், பிரேத பரிசோதனை தொடர்பான மேலதிக ஆவணங்களையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்தனர்.
விசாரணையின் போது CCD அதிகாரிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
-
இரத்த மாதிரிகள்: சந்திரசேனவின் உடலில் இருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்ப அனுமதி கோரப்பட்டது.
-
கையடக்கத் தொலைபேசி: உயிரிழந்தவரின் கையடக்கத் தொலைபேசி ‘முக அடையாளத் தொழில்நுட்பம்’ (Facial Recognition) மூலம் பூட்டப்பட்டுள்ளதால், அதனைத் திறக்க அதிகாரிகளால் முடியவில்லை. எனவே, அந்தத் தொலைபேசியை அதன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி திறப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.
-
கழுத்துப் பட்டி (Necktie): சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கழுத்துப் பட்டி ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆய்விற்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மருந்துகள் மற்றும் அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து நீதவான் கேள்வி எழுப்பினார். அவை ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் CCD அதிகாரிகள் பதிலளித்தனர்.
பொலிஸாரின் கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதேவேளை, இந்த விசாரணைத் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கு புதன்கிழமை (14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.