கனடாவில் நடைபெற்ற நாய்களுக்கான தாண்டும் போட்டியில், 56 பேரை வெறும் 16 விநாடிகளில் தாண்டிய நான்கு வயதான பெண் அவுஸ்திரேலியன் ஷெப்பர்ட் நாய் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள பொதுமைதானத்தில் இந்த வித்தியாசமான போட்டி நடைபெற்றது.
எட்மன்டன் ரிவர்ஹாக்ஸ் பேஸ்பால் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், பயிற்சி பெற்ற நாய்கள் மைதானத்தில் சற்று குனிந்த நிலையில் வரிசையாக நின்ற மனிதர்களை ஒரு நிமிடத்திற்குள் தாண்டும் சவால் இடம்பெற்றது.
இதில், ஜெனிபர் ஃப்ரேசரால் பயிற்றுவிக்கப்பட்ட நான்கு வயதான அவுஸ்திரேலியன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘ஷார்டோனே’ என்ற பெண் நாய் பங்கேற்றது.
மைதானத்தில் 56 பேர் வரிசையாக சற்று குனிந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஷார்டோனே அவர்களை வெறும் 16 விநாடிகளில் தாண்டி புதிய கின்னஸ் உலக சாதனையைப் பதிவு செய்தது.
ஷார்டோனேவின் திறமை குறித்து அதன் பயிற்சியாளர் ஜெனிபர் ஃப்ரேசர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாயை தனது முதுகின் மீது தாண்டுவதற்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியதாக தெரிவித்தார்.
அதன்பின்னர் ஷார்டோனேவின் திறமைகள் படிப்படியாக அதிகரித்ததாகவும், மனிதர்களைத் தாண்டுவது அதன் பல்வேறு திறமைகளில் ஒன்றே என்றும் அவர் குறிப்பிட்டார்.