ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டது தொடர்பான விவரங்களோ, அல்லது தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இச்சம்பவம் குறித்து யாரேனும் தன்னைத் தொடர்புகொண்டார்களா என்பது பற்றியோ நினைவுகூர முடியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2011 டிசம்பரில் சமூக ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து ஜூம் (Zoom) வழியே செவ்வாய்க்கிழமை கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியமளித்தார். காணாமல் போன இவ்விருவரின் உறவினர்கள் தாக்கல் செய்த இப் புகாரில், ராஜபக்ஷ ஒரு சாட்சியாகப் பெயரிடப்பட்டிருந்தார்.
. நொயார் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து லலித் அலஹகோனிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததா எனக் கேட்கப்பட்டதற்கு, ராஜபக்ஷ: “கனம் நீதிபதி அவர்களே, அது எனக்கு நினைவில்லை” என்று பதிலளித்தார். இச்சம்பவங்கள் நடந்து சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும், சாட்சியமளிப்பதற்கு முன் தான் விவரங்களை மீண்டும் பரிசீலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தான் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றிக் கேட்கப்பட்டபோது, நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிய ராஜபக்ஷ, அவற்றை பொய் என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறி நிராகரித்தார்.
மேலும் சாட்சியப் பதிவை நவம்பர் 27 வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் ராஜபக்ஷவை முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.