உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்பட வில்லை என, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (12) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
அதற்கமைய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தட்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யவோ அல்லது தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்பட வில்லை என, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிஸிடர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் இந்த விடயத்தை மன்றில் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.