அமர்ந்திருக்கும்போது கால் ஆட்டுவது, மொபைலில் பேசும்போது நடப்பது உள்ளிட்ட தற்செயல் உடல் அசைவுகளும் இதய ரத்தக் குழாய் நோய்களின் அபாயத்தையும் சில நேரங்களில் மரண ஆபத்தையும் கூட குறைக்கக்கூடும்
திட்டமிட்டு உடற்பயிற்சி செய்யாத நேரங்களிலும் நாம் மேற்கொள்ளும் சிறிய உடலசைவுகள் இதய ரத்தக் குழாய் நோய்களின் அபாயத்தையும், சில நேரங்களில் மரண ஆபத்தையும் கூட குறைக்கக்கூடும். கூட்டத்தில் அமர்ந்திருக்கும்போது, விமானப் பயணத்தின்போது அல்லது இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதுகூட இதுபோன்ற எளிய அசைவுகளைச் செய்யலாம்.
ஒரு நாள் முழுவதும் அமர்ந்தபடியே இருப்பது எளிதான விஷயமாகிவிட்டது. முதலில் அலுவலக நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது, பின்னர் வாகனத்தில் பயணம், அதன் பிறகு வீட்டில் சோஃபாவில் சில மணி நேரம் செலவிடுவது என நாள் நகர்கிறது. இரவு உணவு சாப்பிடும் நேரத்தில் தான், நாள் முழுவதும் எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை என்பது பலருக்குப் புரிகிறது.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை பல்வேறு கடுமையான உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றன. எனவே, அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் எந்த முயற்சியும் ஒட்டுமொத்த உடல்நலத்துக்கு நன்மை பயக்கும். ஆனால் அதற்கென நேரம் ஒதுக்குவது பலருக்கு சவாலாக இருக்கலாம்.
அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே “தற்செயலான உடற்பயிற்சி” (Incidental Exercise) முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்ட உடற்பயிற்சிக்கு அப்பால், அன்றாட வாழ்க்கையில் நாம் இயல்பாகச் செய்யும் உடலசைவுகளே இதன் அடிப்படை. இது “Non-Exercise Activity Thermogenesis- (NEAT) என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, தூங்குவது, உணவு உட்கொள்வது அல்லது திட்டமிட்டு உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றைத் தவிர, உடல் இயக்கத்துக்காக செலவிடப்படும் ஆற்றல் என இதை விளக்குகிறார் நியூசிலாந்தின் ஆக்லாண்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் அனந்த நாராயணன்.
அமர்ந்தபடி கால் ஆட்டுவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற சாதாரண செயல்கள்கூட தற்செயலான உடற்பயிற்சியாகக் கருதப்படுகின்றன. “உட்கார்ந்திருக்கும் நிலையில் உடல் நிலையை மாற்றிக்கொள்வது, தோள்பட்டையைச் சுழற்றுவது, பாதங்களை வளைத்து நீட்டுவது போன்ற சிறிய அசைவுகளும் இதில் அடங்கும்” என்கிறார் அவர்.
தற்செயலான உடற்பயிற்சி, எதிர்பாராத வகையில் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்து வருகிறது. இது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், சில ஆய்வுகளின் படி மரண ஆபத்தைக் கூடக் குறைக்கவும் உதவக்கூடும்.
இந்த வகையான உடலசைவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த பிறகு, அன்றாட வாழ்க்கையில் சில எளிய மாற்றங்கள் மூலம் அவற்றை அதிகப்படுத்த முடியும்.