இஸ்லாமாபாத்தில் 15 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஈரானுடனான உடன்பாடு எட்டப்படாமல் போனதற்கான காரணங்களை விளக்கினார்.
“ஈரான் அணு ஆயுதத்தைப் பெற முயற்சிக்காது என்பதற்கும், அணு ஆயுதத்தை விரைவாக உருவாக்கக்கூடிய கருவிகளை நாடமாட்டார்கள் என்பதற்கும் ஒரு உறுதியான உறுதிப்பாட்டை (Affirmative commitment) நாங்கள் காண வேண்டும்,” என்று வான்ஸ் தெரிவித்தார். இது அதிபர் டிரம்பின் “முதன்மையான இலக்கு” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தரவுகளின்படி, 2025 ஜூன் நிலவரப்படி ஈரான் 972 பவுண்டுகள் (60% செறிவூட்டப்பட்ட) யுரேனியத்தைக் கொண்டிருந்தது. இது அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான 90% செறிவூட்டல் நிலையை அடைவதற்கு மிக நெருக்கமான நிலையாகும்.
ஈரானின் ‘போர்டோ’ (Fordo) மற்றும் ‘நடான்ஸ்’ (Natanz) ஆகிய அணு உலைகள் 2025 ஜூன் மாதம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக டிரம்ப் மற்றும் வேன்ஸ் ஆகியோர் கூறி வருகின்றனர். எனினும், இதனை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“கேள்வி மிகவும் எளிமையானது: இப்போது மட்டுமல்ல, இன்னும் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கும் அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டோம் என்ற அடிப்படை உறுதிப்பாட்டை ஈரான் காட்டுகிறதா? அதை நாங்கள் இன்னும் காணவில்லை. எதிர்காலத்தில் காண்போம் என நம்புகிறோம்,” என்று வான்ஸ் தெரிவித்தார்.
21 மணிநேரத் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, ஈரானின் அணுசக்தி கொள்கை மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு தொடர்பான விவகாரங்களில் இணக்கம் காணப்படாததால், இந்தப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்துள்ளது.