மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உரிய தரத்துடனான புதிய பஸ்களைச் சேவையில் இணைப்பதற்கும், பழைய பஸ்களைப் படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்குமான திட்டங்களை அரசாங்கம் தற்போது தயாரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது ஒரே தடவையில் மேற்கொள்ளக் கூடியதல்ல என்றாலும், சில ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் செயல்படுவதன் மூலம் அரசாங்கத்தின் பிரதான இலக்கான தரமான பஸ் சேவையை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகளுக்கும் 342 நடத்துநர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று(10) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நியமனக் கடிதங்கள் வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் சிலருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பிற்காலத்தில் அரசியல் நியமனங்கள் மற்றும் பல்வேறு முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்த இ.போ.சபையை மீண்டும் ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாகக் கட்டியெழுப்ப இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்ததோடு புதிய நியமனம் பெற்றவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.