நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் 73 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில், இந்த பாதிப்பு 23 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது,
அதாவது ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயாளர்களாக உள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் கண் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்,.
மேலும் இதில் 11 சதவீதமானோர் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வையற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது, ஏனெனில் நீரிழிவு குறிப்பாக கண்களை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு தொடர்பான குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 923 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பொருளாதார விளைவுகள் கணிசமானவை என்றும் வைத்தியர் பந்துதிலக மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறான நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய் தடுக்கக்கூடியது எனவும். இந்த நபர்கள் பார்வையை இழக்க எந்த காரணமும் இல்லை. அதன் ஆரம்ப கட்டங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், முழுமையான தடுப்பு சாத்தியமில்லை என்றாலும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை பார்வையைப் பாதுகாக்க உதவும் என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்துள்ளார்.