இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கான உடன்பாட்டை எட்டியமைக்காக இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன், நிலையான பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு IMF தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
முன்னேற்றத்திற்குப் பாராட்டு: சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கென்ஜி ஒகாமுரா, உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
எரிசக்தி விலை மற்றும் சீர்திருத்தங்கள்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள நிதி உதவிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், எரிசக்தி விலைகளைச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப (Cost-reflective pricing) உரிய நேரத்தில் திருத்தியமைப்பதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதுடன், நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தச் சீர்திருத்தங்களைத் தொடருமாறு ஊக்கப்படுத்தினார்.
இலங்கையின் நன்றி: சமீபத்திய சூறாவளி அனர்த்தம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட சவால்களைக் கருத்திற்கொண்டு, வேலைத்திட்டத்தின் நிபந்தனைகளில் (Program parameters) நெகிழ்வுத்தன்மையைக் காட்டியதற்காக IMF தலைமைத்துவத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தத் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என மத்திய வங்கி ஆளுநர் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.