இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது, OCI வீசா பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டமை குறித்து செந்தில் தொண்டமான் நன்றியைத் தெரிவித்தார். இருப்பினும், தற்போது OCI வீசா பெறுவதற்கான கட்டணம் 90,000 இலங்கை ரூபாவாக உள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, இக்கட்டணத்தை விசேட சலுகை அடிப்படையில் குறைக்குமாறு அவர் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தெலுங்கானா முதலமைச்சருடன் தான் முன்னெடுத்த கலந்துரையாடல்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் செந்தில் தொண்டமான் தெளிவுபடுத்தினார். அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.