இன்று கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு நடைபெறவுள்ளமை சகலருக்கும் தெரிந்ததே!. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்களின் பங்களிப்பிலும் உலகளாவிய ரீதியிலான ஆதரவுக் குரல்களோடும் நடைபெறவுள்ள ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வில் செம்மணி மனிதப் புதைகுழிப் பேரவலத்தை ஒரு நாடகமாக அரங்கேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ வரலாற்றிலும் உலக மனித உரிமைப் பரப்பிலும் “செம்மணி” என்ற சொல் வெறும் ஒரு நிலப்பரப்பைக் குறிப்பது அல்ல மாறாக, அது ஆறாத காயத்தின், பேரழிவின், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் அடையாளச் சின்னமாக உள்ளது.
நீண்ட தசாப்தகால மௌனத்திற்குப் பிறகு, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் அகழ்வாராய்ச்சிகளில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என சகல வயதுத் தரப்பினரதும் நூற்றுக் கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதற்க எதிராக நீதியை நிலைநாட்டுதல். உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குரலாக இந்நாள் அமைகிறது.
‘செம்மணி மனிதப் பேரவலத்தை’ சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து பன்னாட்டு விசாரணைக்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியது புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு. உரிமைக்குரல் கொடுக்க நாற் திசைகளிலுமிருந்து ஒன்று திரண்டு ‘விழித்தெழு தமிழா’ நிகழ்வுக்கு வலுச் சேர்ப்போம்!