தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், வரும் தேர்தலிலும் மக்கள் முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கே ஆதரவளிப்பார்கள் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்நிலை மற்றும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசித்து வந்த 876 குடும்பங்களுக்கு, சுமார் ரூ.129 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 400 சதுர அடி பரப்பளவில், தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான இந்த வீடுகளைச் சென்னையில் இருந்து முதல்வர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேரவைத் தலைவர் மு. அப்பாவு, மத்திய அரசின் நிதிப் பகிர்வு மற்றும் கடன் விவகாரங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இது குறித்துப் பேசிய அப்பாவு, அரசிடம் போதிய நிதி இல்லாத சூழலிலும், ஏழை மக்களின் நலன் கருதி ஆசிய வங்கியிடம் ரூ. 129 கோடி கடன் பெற்று இந்தத் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இந்த வீடுகளைப் பெற்ற மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார்.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய மத்திய அரசின் அறிவிப்பு குறித்துப் பேசியவர், “இது ஒரு சதித் திட்டம். 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி தேவைப்படுகிறது. ஆனால், 125 நாட்களாக உயர்த்திய பிறகு மத்திய அரசு ஒதுக்கப்போகும் நிதி வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே. பாதி நிதியைக் குறைத்துவிட்டு எப்படி வேலை வழங்க முடியும்? இது ஏழை மக்களுக்கு எதிரான வஞ்சனை” என்று சாடினார்.
மேலும், மருத்துவக் கல்லூரி போன்ற திட்டங்களுக்கு மாநில அரசு 60% நிதி வழங்கினாலும், அதற்குப் பிரதமர் மோடியின் பெயரை வைக்கச் சொல்லி மத்திய அரசு வற்புறுத்துவதாகவும், தமிழகத்தின் ஜிஎஸ்டி வரியில் உரியப் பங்கினை (50%) வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.