சென்னை:
சிறுமிகள் பாலியல் வழக்கில் சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும் என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிவிட்டுள்ளார்.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, 84 வயதில் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நீதியைப் பேரம் பேச முடியாது:
“ஒரு குழந்தையின் வலியைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியாது; அவளது குரலை அடக்கிவிடவும் முடியாது; நீதியை ஒருபோதும் பேரம் பேசித் தீர்மானிக்க முடியாது. அதேவேளையில், அதிகாரமிக்கவர்கள் தங்களைத் தண்டிக்கவே முடியாது என்று நினைக்கும் நிலையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குழந்தை மீதான பாலியல் வன்கொடுமையை விடக் கொடூரமான, கோழைத்தனமான மற்றும் மன்னிக்க முடியாத செயல் வேறெதுவும் இல்லை.
ரூ.70 கோடி பணம் பயன்படுத்தப்பட்டதா?
இது குறித்த எனது கோபம் முழுமையானது, உறுதியானது மற்றும் சமரசமற்றது. பாதிக்கப்பட்டவரை மௌனமாக்கவோ அல்லது நீதியைத் தடுக்கவோ செல்வாக்கு, அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் அல்லது பணம் (இவ்வழக்கில் 70 கோடி ரூபாய்) ஆகியவை பயன்படுத்தப்பட்டால், அது என் கோபத்தை மேலும் அதிகரிக்கிறது. அது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
எப்படித் தப்பித்து வந்தார்?
ஆர்.வீரமணி வழக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படித் தண்டனையின்றித் தப்பித்து வந்தார்? இது எவ்வளவு அவமானகரமானது! குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க வழியே இருக்கக்கூடாது. சட்டம் தனது முழு வலிமையுடன் செயல்பட்டு, குற்றவாளியையும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்களையும் தாமதமின்றித் தண்டிக்க வேண்டும்\” என்று குஷ்பு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
#Khushbu #GemVeeramani #POCSO #BJP #ChildRights #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive