சென்னை:
இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர். காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறி கடந்த ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தலுக்குத் தடை விதித்தது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர். விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் தனது மனுவில், “தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த தவெக வேட்பாளர் முருகேசன் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. மாறாக, திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் தான் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். ஆகையால், நீதிமன்றம் அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பில்லை. தேர்தல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளே நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், இடைத்தேர்தல் நடத்த அனுமதித்தால் எவ்விதச் சிக்கலான சூழலும் ஏற்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்கிற காரணத்துக்காக, மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக் கூடாது” என ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தாக்கல் செய்துள்ள இந்த முக்கிய மனுக்கள் விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#CVijayabaskar #MRVijayabaskar #ByElections #AIADMK #MadrasHighCourt #Karur #Viralimalai #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive