அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக இராணுவத்தை வழி நடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயில் (Susan Coyle), வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளார்.
ஆஸ்திரேலிய இராணுவத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இராணுவத்திற்குள் நிலவும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளைக் களைந்து மாற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கும் ஒரு சூழலில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “எதிர்வரும் ஜூலை மாதம் முதல், ஆஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் இராணுவத் தளபதியாகப் பணியாற்றுவார்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இந்த நியமனத்தை ஒரு “முக்கியமான வரலாற்றுத் தருணம்” என்று அழைத்தார். சூசன் கோயிலின் இந்தச் சாதனை, தற்போது பாதுகாப்புப் படையில் பணியாற்றும் பெண்களுக்கும், எதிர்காலத்தில் சேர விரும்பும் பெண்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
55 வயதான சூசன் கோயில் 1987-இல் இராணுவத்தில் இணைந்தார். இராணுவத்தின் ஒரு சேவைப் பிரிவுக்குத் தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
தற்போது ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்கள் சுமார் 21% பங்களிப்பை வழங்குகின்றனர். இதனை 2030-ஆம் ஆண்டளவில் 25% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்படையின் தற்போதைய தளபதி வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் ஒட்டுமொத்த தலைவராக (Head of the ADF) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரியர் அட்மிரல் மேத்யூ பக்லி கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்பார்.