‘ஏஹிபஸ்ஸிகோ’ அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள், நேற்று (24) மாலை மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையை சென்றடைந்ததுடன் நிறைவுற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமான இந்த நடைபயணம், நேற்றைய தினம் 25 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்யாகர தேரர் தலைமையிலான 13 பிக்குகளைக் கொண்ட குழுவினர், நேற்று காலை ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றனர். இதன்போது ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களை வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து, நடைபயணத்தில் ஈடுபடும் பிக்குகள் மற்றும் வெளிநாட்டு பௌத்த அடியார்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
வணக்கத்திற்குரிய பஞ்யாகர தேரர் தலைமையிலான பிக்குகளையும், உலகளாவிய ரீதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ‘அலோகா’ என்ற நாயையும் காண்பதற்காகநேற்றும் வீதியின் இருமருங்கிலும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.
பிக்குகள் வருகை தரும் பாதையில் பௌத்த அடியார்கள் வெள்ளைத் துணிகளை விரித்தும், வாழை இலைகளைப் பரப்பியும், நீர் தெளித்தும் வரவேற்றனர்.
இன்றைய பயணத்தின் நினைவாக பஞ்யாகர தேரர் பஹல கடு கன்னாவ பகுதியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.