அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கொவிட்-19 போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் (Tulane University) இருந்த ஆய்வகக் குரங்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தக் குரங்குகள் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கொவிட்-19 (Covid-19) போன்ற பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், இவை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஷெரிப் துறையின் சமூக ஊடகப் பதிவில், “இந்தக் குரங்குகள் சுமார் 40 பவுண்டுகள் (சுமார் 18 கிலோ) எடை கொண்டவை. இவை மனிதர்களுக்கு எதிராக ஆக்ரோஷமானவை என்பதால், இவற்றைக் கையாள தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE – Personal Protective Equipment) தேவைப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள், தப்பி ஓடிய இந்தக் குரங்குகளை மக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும், அவற்றை எங்கு கண்டாலும் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.