ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ளூர் நகராட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தடை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம், நகராட்சிகளில் புதிய போக்குவரத்து அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த 210 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.
வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து நகராட்சிகளுக்கு வருவாய் ஈட்டுவதால், வேகக் கேமராக்களை ‘பண வேட்டை’ என்று முதல்வர் டக் ஃபோர்ட் பல வாரங்களாகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அவரது அரசு கடந்த மாதம் இந்த கேமராக்களின் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது.
வேகக் கேமராக்கள் வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைக்க உதவாது என்று ஃபோர்ட் கூறியபோதிலும், நகராட்சிகள் மற்றும் சிக் சில்ட்ரன்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைப்பதில் கேமராக்கள் பலனளிக்கின்றன என்று நிரூபித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.