கனடாவில் உணவு வங்கிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மற்றுமொரு புதிய சாதனையை எட்டியுள்ளதாக வருடாந்த ‘Hunger Count’ அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உணவு வங்கிகளை நாடிச் செல்வோர் எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பல கனேடியர்கள் போராடி வருவதையே இந்த எண்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த ‘Food Banks Canada’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டின் பியர்ட்ஸ்லி, இந்த கவலைக்குரிய போக்குகள் மிகவும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவைப் பூர்த்தி செய்வதில் காணப்படும் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், கனடிய மத்திய அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள உணவு வங்கிகள் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதாகவும், இந்தச் சவாலை எதிர்கொள்ள அரசாங்கத்தின் தலையீடு அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.