சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தபோது, நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கண்காணிப்புப் பணியில் இருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் யுவராஜ் என்பவர், தனது லேப்டாப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அவர் படம் பார்ப்பதைப் புகைப்படம் எடுத்துத் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த திரைப்படத்தைப் பார்த்தது மற்றும் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்தது குறித்துக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் யுவராஜைக் கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இணையத்தில் கசிந்த இப்படத்தைப் பகிரவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது என சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், பலத்த பாதுகாப்பு கொண்ட மையத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Jananayagan #ThalapathyVijay #ChennaiNews #ElectionControlRoom #EVM #AnnaUniversity #Arrested #CCTV #SecurityLapse #BreakingNews #TamilPolitics #CyberCrime #Yuvaraj #ChennaiCorporation #JananayaganLeaked #TamilCinema #May4 #Election2026