யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் உள்ள யா/ கணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் கடந்த ஐந்து மாதங்களாக அதிபர் நியமிக்கப்படாத நிலைமை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில், முன்னாள் அதிபர் கடந்த 2025 ஒக்டோபர் 8 ஆம் திகதி மாற்றலாகி சென்றதையடுத்து, இதுவரை நிரந்தர அதிபர் நியமனம் செய்யப்படவில்லை.
தற்போது சிரேஸ்ட ஆசிரியர் ஒருவர் பதிலதிபராக கடமையாற்றி வருகிறார். இதனால் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், புதிய அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஆளுநருக்கு மனு கையளிக்கும் நோக்கில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களுடன் இணைந்து மதத் தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் பலரும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.