முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் சாட்சியாளர்களிடம் சாட்சிப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ரஷாந்த கொடவெல உத்தரவிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 ஆம் திகதி 11 பத்திரிக்கைகளை மேலதிகமாக வெளியிடுவதுக்காக, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 1,748,877.76 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவிந்துள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, 17 இலட்சத்திற்கும் அதிக தொகையை அரசாங்கத்திற்கு நட்டப்படுத்தியமை ஊடாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.