கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார்.
கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி – இலங்கை ), சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதத்தின் மகளாவார்.
‘அன்சாம்பில் மொன்ட்ரியல்’ (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார். கனடா சேவை மையத்தில் (Service Canada) பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர்.
தனது வெற்றியையடுத்து கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, “இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன். நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீதிப் போக்குவரத்துகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கியூபெக் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியின் இந்த வரலாற்று வெற்றி, மொன்ட்ரியால் மற்றும் கியூபெக்கின் பல்பண்பாட்டு ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.