மேற்கு வங்கத்தில், 32,000 துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கட்டா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தப்பினர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2014ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை தொடர்ந்து, துவக்க பள்ளி ஆசிரியர்களாக, 45,000 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமன நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த, 2023ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய, 32,000 ஆசிரியர்கள் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன், மூன்று மாதங்களுக்குள் புதிதாக ஆசிரியர் நியமன நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி அரசு தரப்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, நீதிபதி சோமன் சென் தலைமையிலான டிவிஷன் அமர்வு விசாரித்தது. ஒரு கட்டத்தில் தனிப்பட்ட காரணங்களால் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
அதன் பின், உச்ச நீதிமன்றத்தை மேற்கு வங்க அரசு அணுகிய நிலையில், கொல்கட்டா உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை மீண்டும் கொல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கே அனுப்பி வைத்தது.
இந்த முறை நீதிபதிகள் தபாபிரதா சக்ரவர்த்தி மற்றும் ரீத்தோபிரோடோ குமார் மித்ரா அடங்கிய அமர்வு இறுதி விசாரணை நடத்தி, ஒரு நீதிபதி அமர்வின் உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த 32,000 துவக்க பள்ளி ஆசிரியர்கள் தப்பினர். கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.