1971-ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு வார்த்தையாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உள்ளது என்றால் அது மிகையல்ல. ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்தோ அல்லது எதிர்க்கட்சியில் இருப்பவர்களிடமிருந்தோ இதற்கான ஆதரவு என்பது கடந்த 50 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் இருந்து வருகிறது.
ஆனாலும் சட்டச் சிக்கல், நிர்வாகக் குளறுபடி, மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவர்களின் கடும் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?
-
இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 543 மக்களவை இடங்கள் உள்ளன.
-
இந்தியா முழுவதும் 4,123 சட்டமன்ற இடங்கள் உள்ளன.
-
மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும், மக்களவைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனித்தனியாகத் தேர்தல் நடைபெற்று வருவது தற்போது வரை உள்ள நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1952, 1957, 1962-ஆம் ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகவே தேர்தல் நடைபெற்றது. 1971-க்குப் பிறகு அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
மத்திய அரசின் தீவிர முயற்சிகளும் மசோதாவும்
மத்தியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும் இந்த விவகாரத்தில் பெரிய அளவில் முன்னெடுப்புகளைச் செய்ய முடியாத நிலையில், இம்முறை அதிகப்படியான ஆர்வத்தைக் காட்டி வருகிறது.
-
ராம்நாத் கோவிந்த் குழு: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்தது.
-
அரசியலமைப்பு திருத்த மசோதா: அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின் ஆரம்பப் புள்ளியாக, அரசியலமைப்பு 129-வது சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்தது.
-
இந்த மசோதா அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால், இதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும். ஆனால், மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடனே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மக்களவை போர்க்களமானது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு
இதனால் மத்திய அரசு இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியது. பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பி.பி.சவுத்ரி இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 31 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த மசோதாவை எதிர்ப்பதாகக் கருத்து தெரிவித்தன. குறிப்பாக, “ஒரே நேரத்தில் மத்தியிலும், மாநிலங்களிலும் தேர்தல் என்பது கூட்டாட்சித் தன்மைக்கு விடப்படுகின்ற சவால்” என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், கூட்டத்திற்குப் பிறகு பேசிய நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாகப் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டு விட்டதாகவும், 99% பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மற்றவர்களும் இதற்கு ஆதரவு கொடுத்தால் 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே இதை அமல்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி கலைப்புச் சிக்கல்கள்
‘ஒரே நாடு ஒரே தேர்தலில்’ மிக முக்கியச் சிக்கலாக இருப்பது, மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ ஆளும் அரசுகள் பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டால், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான்.
-
1959-ஆம் ஆண்டு அப்போதைய கேரள முதல்வர் நம்பூதிரிபாட்டின் ஆட்சியைப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு அப்போதைய பிரதமர் நேரு கலைத்தார். தொடர்ந்து சில மாதங்கள் கேரளாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தேர்தல் நடைபெற்று வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது.
-
இது போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பேச்சை எடுக்கும்போதெல்லாம் மாநிலங்களில் பொறுப்பில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதனால், கடந்த 55 ஆண்டுகளாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நிறைவேற்ற முடியாத ஒன்றாகவே நீடிக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை எதிர்த்து வரும் நிலையில், மாநிலக் கட்சிகளின் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தி.மு.க. – த.வெ.க. நிலைப்பாடு
-
தி.மு.க.: இந்தத் திட்டம் நிறைவேற்ற முடியாத ஒன்று என்றும், மக்களின் வரிப்பண விரயம் மட்டுமே நடைபெறும் என்றும் கூறி ஆரம்பத்திலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் தி.மு.க. என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
-
அ.தி.மு.க.: அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க.: தமிழகத்தில் முதல் முறையாகத் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்துள்ள த.வெ.க., இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து, மூன்றே ஆண்டுகளில் தங்களின் ஆட்சிப் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை த.வெ.க. ஏற்குமா? அல்லது மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களும் சவால்களும்
இந்த விவகாரத்தில் மிக முக்கியமானது அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும்.
-
2027: உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
-
2028: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் செல்வாக்காக உள்ள நிலையில், மத்திய அரசின் விருப்பத்துக்காகத் தங்களின் ஆட்சி ஒன்றிரண்டு ஆண்டுகளில் பறிபோவதை அவர்கள் ஏற்பார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. பல தசாப்தங்களாக முடியாத ஒரு காரியத்தில் வெற்றிபெற மத்திய அரசு தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தாலும், அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுவதால் இந்த மசோதாவை எளிதாக நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வியும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
#OneNationOneElection #TVKGovernment #ChiefMinisterVijay #Onoe #TamilNaduPolitics #TNPolitics #DMK #ADMK #BJP #Congress #Elections2029 #IndianPolitics #ParliamentBill #PoliticalNews #TamilNews #TrendingTN #LatestNewsTN #ElectoralReform