வாழைச்சேனை பொலிஸாரின் தொடர் நடவடிக்கையினால் நேற்று (15.11.2025) சனிக்கிழமை மாலை மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது, 39, 42, 49 வயதுடைய பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை மற்றும் நாவலடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியில் வைத்து கைதான 39 வயது சந்தேக நபரிடமிருந்து 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், வாழைச்சேனை ஹைறாத் வீதியில் கைதான 42 வயது சந்தேக நபரிடமிருந்து 35 மில்லி கிராம் ஹெரோயினும் ஜிம் செண்டர் வீதி, நாவலடியில் வைத்து கைதான 49 வயதான சந்தேக நபரிடமிருந்து 4,790 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வினியோகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.