மண்சரிவு அபாயத்தால் மூடப்பட்டிருந்த பாடசாலை ஒன்றை மீளத் திறக்க பரிந்துரை
மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 02 மாதங்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான பரிந்துரையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று(25) வழங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி நிலவிய சீரற்ற வானிலையுடன், இப்பாடசாலைக்கு மேலே அமைந்துள்ள ஸ்ரீ கவீஷ்வர வேலுவனாராம விகாரையின் பாதுகாப்பு மதில் மண்சரிவுக்கு உள்ளானது.
இதன் காரணமாக, NBRO இன் பரிந்துரையின் பேரில் சுமார் இரண்டு மாத காலமாக அந்தப் பாடசாலை மூடப்பட்டிருந்தது.
புத்தாண்டின் முதல் பாடசாலை தவணை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தரம் 01 முதல் தரம் 05 வரையான வகுப்புக்களை நடத்த இதுவரை முடியாமல் போனதையடுத்து, இது குறித்து பெற்றோர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் இடையில் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே, சரிந்து விழுந்த மண் மேட்டை அகற்றி பாடசாலையை மீண்டும் திறக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
அதற்கமைய, இன்று குறித்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்த புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் புவிச் சரிதவியல் அதிகாரி சமந்த போகஹபிட்டிய, பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.