முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் அகற்றியமையானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழினப்படுகொலையின் அடையாளச் சின்னமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்கு செல்லும் பாதையினை அடையாளப்படுத்தும் நினைவுக்கல் ஒன்று கடந்த மே மாதம் (18.05.2026) அன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில் அரச புலனாய்வாளர்களால் இது தொடர்பில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த நினைவுக் கல்லின் ஒரு பகுதியாக இருந்த ஒரு மனிதரின் உருவம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த நினைவுக்கல்லினை அகற்றுவதற்கு அரச புலனாய்வுப் பிரிவு கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.இதன் ஒரு அங்கமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் இந்த நினைவுக்கல்லினை அகற்றியுள்ளனர்.இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையானது தமிழ் மக்களின் உணர்வுகளை நினைவுகளை அழிக்க துணை போகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணியில் மக்கள் பாலத்தின் ஒரு பகுதியையாவது அழிக்க வேண்டாம் என கோரிய போதும் பழைய பாலம் இருக்கக் கூடியவாறே பாலம் அமைக்கக்கூடிய வழிவகைகள் இருந்தும் அதனை செய்யாது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட போதும் அமைதியாக இருந்து மிக சூட்சுமமாக குறித்த பாலத்தை முழுமையாக அழித்து புதிய பாலத்தை அமைத்து வருகிறது.
குறிப்பாக இந்த அரசும் தனது திணைக்களங்கள் ஊடாக திட்டமிட்டு இவ்வாறு தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது இவ்வாறு பழைய அரசுகளை போலவே செயற்ப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.