யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைப்பெறவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சுக்கு மீண்டெழும் செலவுகளுக்காக 70 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீள் அறவிடப்படாத திட்டத்தின் கீழ் வீடமைப்புக்காக 10 இலட்சம் ரூபா வழங்குவது தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வரவு – செலவுத் திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு மற்றும் நீர்பாசனத் திட்டம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து வீடமைப்பு மற்றும் நீர்பாசனத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்தேன். யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மீள்குடியேற்றத் திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைப்பெறவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்றார்.