கலாவெவ மற்றும் விஜிதபுர சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (27) மாலை பெய்த மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்கத்தினால், விவசாய நிலங்களில் பணியில் ஈடுபட்டிருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜிதபுர, கணக்கன்மடுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஜெமால்தீன் பதூர்தீன் மற்றும் விஜிதபுர, புளியங்குளம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய தென்னகோன் முதியன்சேலாகே ஜக்சன் சேனாரத்ன தென்னகோன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் கணக்கன்மடுவ மற்றும் புளியங்குளம் பகுதிகளில் அமைந்துள்ள தமது விவசாய நிலங்களில், நிலத்தை பண்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பதூர்தீன் என்பவரது சடலம் அவரது இல்லத்திலும், தென்னகோன் என்பவரது சடலம் கலாவெவ வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த திடீர் மரணங்கள் குறித்து, இப்பலோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.