மட்டக்களப்பில் உள்ள களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் மலையகத்தை புரட்டிப் போட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி இன்று வரை 627 பேர் உயிரிழந்ததோடு, 190 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டித்வா புயலினால் மலையக மக்கள் தமது இருப்பிடங்களை முற்றாக இழந்து நிர்க்கதியாகியுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும், பலரும் தம்மால் இயன்ற உதவிகளை நல்கி வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அவற்றை மலையக மக்களுக்கு நேரடியாகவே கொண்டு சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பொதியும் தலா 600 ருபாவுக்கு அதிக பெறுமதியானவை என்பதுடன், அப்பொதிகளுக்குள் அரிசி, பருப்பு, பால்மா, ரின்மீன், சோயா உள்ளிட்ட பல உலர் உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளன.