சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
மருந்து வகைகளுக்கான விலைகுறைப்புத் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (17) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்துக்கமைய, மருந்துகளுக்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகே உள்ளது. மேற்படி சட்டத்துக்கமைய கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மருந்துகளின் விலை நிர்ணயம் சீராக மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதற்கு எதிராக 2023 ஆம் ஆண்டு மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.
குறித்த வழக்கு விசாரணை காரணமாக மருந்துகளுக்கான விலை நிர்ணயத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. சமீபத்தில் சுகாதார அமைச்சர் விலை நிர்னயம் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்ததுடன், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தற்போது மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நியாயமான முறையில் மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும். அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.