மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை (02) மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் மற்றும் கிலன்டில் தோட்டப் பகுதிகளில் உள்ள மாணா பற்றைகளுக்கும், சிவனொளிபாத மலை தொடர் வனப்பகுதிகளுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
தீ வேகமாக பரவியதன் காரணமாக பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள அரிய வகை வன ஜீவராசிகள் பல உயிரிழந்துள்ளன. தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுகள் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் நேரடி விளைவாக, தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
இவ்வாறு திட்டமிட்டு காடுகளுக்கு தீ வைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.