மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போதைய அரசாங்கத்தின் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் என்பது தமது நண்பர்களுக்கு திறைசேரியை காலி செய்ய வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகும். தற்போது, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து, மக்கள் மத்தியில் இரத்தச் சோகை ஏற்படும் நிலையும் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு வறுமையே காரணமாகும். இவற்றுக்கெல்லாம் அரசியலமைப்பு எதேச்சதிகாரத்தை கொண்டு வருவதே இந்த ஆளும் தரப்பினர்களிடம் காணப்படும் ஒரே தீர்வாக அமைந்து காணப்படுகின்றது.
புதிய அரசியல் கலாசாரத்தை கொண்டு வருவோம் என மக்களுக்கு வாக்குறுதிகள் பல வழங்கி ஆட்சிக்கு வந்த இவர்கள், சிவில் பாதுகாப்பு குழுக்கள், இளைஞர் கழகங்கள் மீது அழுத்தம் கொடுத்து, மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் கட்டமைப்பை கீழ் மட்டத்தில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் அவர்கள் பெலவத்தை கட்சி காரியாலயத்தில் இருந்து மேற்கொண்டு வருவதை வெட்கமில்லாமல் ஏற்றும் கொள்கின்றனர்.
இவை சமூகத்தில் அமைந்து காணப்படும் ஜனநாயக அமைப்புகளாகும். ஜனநாயக அமைப்புகள் ஊடாக கட்சி அரசியலை பலப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு இவர்கள் மாறு செய்கின்றனர். மக்கள் இந்த கலாசாரத்தை எதிர்பார்க்கவில்லை.
அரசாங்கம் தற்சமயம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிநியம் விதித்த இலக்கையும் தாண்டி, அரச வருவாயை ஈட்டிக் கொண்டாலும், அதனை மக்களுக்கு பயனளிக்கும் விதமாக நிவாரணங்கள் எதனையும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கவில்லை. வரிகளை அதிகரித்து, செலவினங்களைக் குறைத்துக் கொண்டமையினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்திக்கும், நலன்புரித் திட்டங்களுக்குமான நிதியை ஒதுக்காது, வரிகளை அதிகரித்து, திறைசேரியை நிரப்புவதால் பயனில்லை. செலவுகளைக் குறைத்து, வரி வருவாயை அதிகரித்து அதன் மூலம் பில்லியன் கணக்கான நிதியை சேமிப்பது சிறந்த செயல் அல்ல என்றார்.