யாழில் மூன்று வயதுக் குழந்தைக்கு அடி காயத்தில் மிளகாய் தூள் பூசி சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொன்னாலை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்று வந்துள்ள நிலையில் நேற்றையதினம்(11.12.2025) இதற்கு எதிரான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணம் முடித்துள்ளார். அவர் இரண்டாவதாக திருமணம் செய்த மனைவியின் பிள்ளைக்கே இவ்வாறு சித்திரவதை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் இணைந்து அந்த குழந்தைக்கு தொடர்ச்சியாக கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த காயங்கள் மீது மிளகாய் தூள் இட்டதாகவும், பச்சை மிளகாயை உண்ண கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.
அந்தவகையில் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர்கள் தொடர்பாக உத்தியோகத்தர்கள் அந்த வீட்டிற்கு சென்ற நிலையில் கணவனும், மனைவியையும் அந்த பிள்ளையையும் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளையை மீட்டு விட்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.