சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வட மாகாணத்தின் முன்னேற்றம் மற்றும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
“பேதங்களை மறந்து, அனைவரும் ஒன்றிணைந்து ‘வளமான வடக்கு மாகாணம்’ என்ற இலக்கை அடைவோம்” என்று ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து கொண்டாடும் இந்தப் பண்டிகை, இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் ஒரு பாலமாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் மக்கள் விரைவாக மீட்சி பெற்று வருவதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அரசு மக்களுக்கு மேலதிக சுமை இன்றி நிவாரணங்களை வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயம், கடற்றொழில், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் வட மாகாணம் தற்போது துரிதமான வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருவதாகவும், இந்தப் புதிய ஆண்டில் அந்த வளர்ச்சி மேலும் பலமடங்கு சிறக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.