தரவரிசையில் ஆண்டு முழுவதும் முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரஸின் அர்யனா சபலெங்காவை பெயரிடுவதாக சங்கம் திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரில் சம்பியனான 27 வயதான சபலெங்கா, இவ்வாண்டில் அதிகபட்சமாக நான்கு தொடர்களில் சம்பியனானதுடன், 63 போட்டிகளில் வென்றிருந்தார். அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர், பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்த சபலெங்கா, விம்பிள்டன் தொடரின் அரையிறுதிப் போட்டி வரையில் முன்னேறியிருந்தார்.
இதேவேளை நான்காம் நிலை வீராங்கனையான அமன்டா அனிசிமோவா மிகவும் மேம்பட்ட வீராங்கனையாக வாக்களிக்கப்பட்டிருந்தார். விம்பிள்டன், ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய 24 வயதான அனிசிமோவா, சங்க இறுதிப் போட்டிகள் தொடருக்கு முதன்முறையாகத் தகுதி பெற்றிருந்தார். ஐந்து தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, இரண்டில் சம்பியனாகியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் தாயான பின்னரான 13 மாதங்களில் களத்துக்குத் திரும்பிய முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான பெலின்டா பென்சிச், ஆண்டின் சிறந்த மீள்வருகையை விருதைப் பெற்றிருந்தார்.
இதுதவிர பருவகாலத்தின் சிறந்த புதுவரவாக கனடாவின் விக்டோரியா மபோகோ தெரிவாகியுள்ளார். 18ஆம் நிலை வரை உயர்ந்த 19 வயதான மபோகோ மொன்றியலில் சம்பியனாகியிருந்தார்.