இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நேற்று( நவ.,01) மாலை துவங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதன் பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும், இந்திய கடற்பரப்பு உள்ளிட்ட கடல்பிராந்தியங்களை கண்காணிக்கவும் பயன்படும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தன்னிறைவு இந்தியாவுக்கு மற்றுமொரு உதாரணமாக உள்ளது. இந்த செயற்கைக்கோள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
செயற்கைக்கோள் ஏவப்படும் வரையில் பல்வேறு சவால்கள் மற்றும் கடினமான நேரங்களை நாம் எதிர்கொண்டிருந்தோம். பருவநிலை நமக்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இதனை நாம் சவாலாக எடுத்துக் கொண்டதுடன் ஒருவருக்கு ஒருவர் ஊக்கமளித்து, மோசமான வானிலை நிலவிய போதும், செயற்கைக்கோள் திட்டத்தை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் ஆக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடற்படை, ராணுவ பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை தகவல் தொடர்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு இது ஊக்கம் அளிக்கும். இந்திய கடற்படைக்காகவும், அதற்கு தேவையான கருவிகளுடன் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்ட அதிநவீன ராக்கெட் இதுவாகும். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்பதால், எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படுகிறது.