பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே வதந்தி பரவிய நிலையில் இன்று அவர் மரணம் அடைந்துவிட்டார்.
இந்திய சினிமாவின் He- man என்று அழைக்கப்பட்ட பாலிவுட் ஜம்பவான் தர்மேந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலாக இருப்பதாக கூறியதை அடுத்து ப்ரீச் கான்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மேந்திரா நவம்பர் 10ம் தேதி காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன் பிறகே அது வதந்தி என்று குடும்பத்தார் தெரிவித்தார்கள்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தர்மேந்திராவுக்கு இன்று மீண்டும் உடல்நலம் மோசமானது. இதையடுத்து அவர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் சென்றதை மக்கள் பார்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் தர்மேந்திரா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
89 வயதானாலும் வாலிபரை போன்று சுறுசுறுப்பாக இருந்து வந்தவர் தர்மேந்திரா. அவருக்கு பிரகாஷ் கவுர், ஹேமமாலினி என்று இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவி மூலம் சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா, அஜிதா என்கிற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மூலம் இஷா தியோல், அஹானா தியோல் என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வந்தார் தர்மேந்திரா. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகவிருக்கும் இக்கிஸ் படத்தின் ட்ரெய்லரை அக்டோபர் 29ம் தேதி போஸ்ட் செய்தார். அது தான் அவரின் கடைசி இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஆகும்.