கரூரில் த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த செப்ரெம்பர் .27 இல் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். 110 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் தலா 20 லட்சம் இந்திய ரூபா வரவு வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உள்ளூர் த.வெ.க. நிர்வாகிகள், “கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் வரமுடியவில்லை. இதனால், பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதி செய்து கொடுத்தால் வருவீர்களா?” என்று கேட்டறிந்தனர். எனினும், இதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.