பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டம் நடத்திய அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், இம்ரான்கான் கட்சியை சேர்ந்த 47 பேருக்கு தலா 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும் தலா 5 இலட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023இல் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பாகிஸ்தான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அப்போது ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த 47 பேருக்கு எதிராக நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது.
குறித்த 47 பேரும் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைகளின்போது முன்னிலையாகாததால்,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.