மட்டக்குளிய பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து, அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களைத் திருடிய நபர் ஒருவரை முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் “மோதர சுதா” என அழைக்கப்படும் 21 வயதுடைய இளைஞர் ஆவார். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முகத்துவாரம் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குறித்த பல்பொருள் அங்காடியின் பின்புறத் தகட்டை அகற்றி உள்ளே நுழைந்து மதுபான போத்தல்களைத் திருடியதாகவும், அவற்றில் சிலவற்றை விற்று ஹெரோயின் போதைப்பொருளை வாங்கியதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபரை மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி பெறப்படவுள்ளது.