பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கலைப்பீட மூன்றாம் வருட மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மேற்படி இரு ஊழியர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஹோகந்தர பகுதியில் இருந்து போதைப்பொருள்களைக் கொண்டு வரும் மேற்படி மாணவன், விடுதி அறையில் வைத்து மின்னணு தராசைப் பயன்படுத்தி அவற்றைக் கிராம் கணக்கில் அளந்து, பொலித்தீன் பைகளில் பொதியிட்டு விநியோகித்துள்ளமை தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மாணவனின் அறையிலிருந்து 85 கிராம் 260 மில்லிகிராம் ஹேஷ், 11 கிராம் 210 மில்லிகிராம் குஷ், மின்னணு தராசு மற்றும் 60 போதைப்பொருள் பொதிகள், 70 ஆயிரத்து 240 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் பொருள்கள் மேலதிக விசாரணைகளுக்காகப் பேராதனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் விடுதி அறையில் தங்கியிருந்த ஏனைய மூன்று மாணவர்கள் மற்றும் அந்த அறைக்கு அடிக்கடி வந்து சென்ற ஒரு மாணவன் என மொத்தம் நால்வர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.