படுகொலை செய்யப்பட்ட “மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவருக்கும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“மிதிகம லசா” இன்று புதன்கிழமை (22) காலை 10.30 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அலுவலக அறைக்குள் நுழைந்து கதிரையில் அமர்ந்திருந்த “மிதிகம லசா” மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த “மிதிகம லசா” சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கருப்பு நிற முகமூடிகளை அணிந்திருந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், “மிதிகம லசா” பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் பாதாள உலக கும்பலின் மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.